திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.86 திருவலம்பொழில் - திருத்தாண்டகம் |
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
1 |
உரித்தானைக் களிறதன் றோல் போர்வையாக
உடையானை உடைபுரியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
2 |
உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந்
திருவீன்ற தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
3 |
பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று
வாரமதா மடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
4 |
வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
5 |
விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு
தெரிந்தானைத் தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
6 |
பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை
எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
7 |
ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
8 |
கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தெம்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
|
9 |
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
10 |
திருச்சிற்றம்பலம் |